Description
ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே ஒரு க்ரைம் கதை என்பதையும் தாண்டி, வாழ்வின் புதிரான பக்கங்களை திகைக்கச் சொன்ன கதையாக ‘சங்காரம்’ பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. சூரி, மார்ட்டின் என்கிற இரு தாதாக்களுக்கு இடையேயான யுத்தம்தான் கதை. ஆனால், அவர்களுக்கு இடையேவரும் எண்ணற்ற பாத்திரங்களும், அவர்களுக்கான கிளைக் கதைகளும் ‘சங்காரம்’ நாவலை தனித்த படைப்பாக மாற்றிவிட்டன. கிளைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகள் கூடவே சேர்ந்து குழப்பத்தையும் கொடுத்துவிடக் கூடியவை. ஆனால், ‘சங்காரம்’ நாவலின் கிளைக் கதைகள் மிக நுட்பமானவை; அரிதானவை; அந்தப் பாத்திரங்களின் பின்னாலேயே இந்த நூலாசிரியர் போய்விடமாட்டாரா என நம்மை ஏங்க வைப்பவை. ஒவ்வொரு பாத்திரங்களின் கிளைக் கதைகளையும் மையக்கதையோடு நூலாசிரியர் கொண்டுவந்து சேர்த்திருக்கும் விதம் அலாதியானது. ஒரு வன்முறை கதைக்குள் அன்பு பூக்கும் பக்கங்கள் அதிகம் இருப்பது ஆச்சர்யம். முறையற்ற காதலாக இருந்தாலும் சூரிக்கும் மரிக்கொழுந்துக்குமான ஈர்ப்பு நம்மைத் திணறடிக்கிறது. மின்மினி பூச்சிகளைச் சேலைக்குள் அள்ளிவந்து காதலனின் தலைமீது மரிக்கொழுந்து கொட்டுகிற ஒற்றைக் காட்சி போதும்… ஓர் இயக்குநர் என்பதாலோ என்னவோ… ஒவ்வொரு காட்சியும் சினிமாவைப் போலவே நெஞ்சுக்குள் விரிகின்றன. படிக்கிறவர்களை, புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கனவு காண வைக்கிற மந்திரம் நூலாசிரியர் இரா.சரவணனுக்கு கைவந்திருக்கிறது. மரிக்கொழுந்து தொடங்கி கல்பனா வரைக்குமான பெண்களின் வாழ்வு இந்த நாவலில் மிக அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. பலதரப்பட்ட பெண்களின் கேவல் நம் காதுகளுக்குக் கேட்கிறது. ‘எப்படியாவது இவர்களுக்கு நல்வாழ்வு அமைந்துவிடாதா?’ என ஒவ்வொரு பெண் பாத்திரத்தின் மீதும் நமக்கு அக்கறை பெருகுகிறது. கதையின் க்ளைமாக்ஸை பெண்களின் கைகளில் ஒப்படைத்த விதத்தில் இந்தப் படைப்பு மகத்தானதாக மாறுகிறது. கத்தியையும் பூங்கொத்தையும் கைக்கு ஒன்றாக வைத்துக்கொண்டு ‘சங்காரம்’ நாவலை இரா.சரவணன் எழுதி இருப்பார்போல… அதனால்தான் கழுத்தறுக்கும் கொலைகளையும், கழுத்தில் அழுந்தப் பதிக்கப்படும் முத்தங்களையும் அவரால் இவ்வளவு ஈர்ப்பாக எழுத முடிந்திருக்கிறது. வெட்டப்படப் போகும் ஆட்டின் மீது அமர்கிற பறவையைப்போல், ஒரு க்ரைம் கதைக்குள் அன்பையும் வாழ்வையும் இந்தளவுக்கு எழுத முடியுமா எனத் திகைக்க வைக்கிறார் இரா.சரவணன். ரத்தமும் முத்தமுமாய் நம்மை கலங்கடிக்கும் நாவல் ‘சங்காரம்’!






Reviews
There are no reviews yet.